உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நியூயார்க்கின் நாசோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அமெரிக்க அணி தரப்பில் நிதிஷ் குமார் 27 ரன்களும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களும், கோரி ஆண்டர்சன் 14 ரன்களும், ஹமீத் சிங் 10 ரன்களும் சேர்க்க ஷாட்லி வான் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
18.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஏமாற்றம் அளித்தனர்.
ரிஷப் பந்த் 18 ரன்னில் வெளியேறினார். 7.3 ஓவர்களில் இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை அணியை வெற்றி பெற வைத்தனர்.
சூர்ய குமார் 50 ரன்களும், ஷிவம் துபே 31 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.