கிளிநொச்சியில் UNDPயின் வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்ட கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால்(UNDP) கிளிநொச்சி மாவட்டதில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (11) நடைபெற்றது.

குறித்த கலந்தரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் UNDP நிறுவனத்தின் அனுசரணையில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1250 பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது குறித்த பயனாளிகளிலிருந்து 500 பயனாளிகளை தெரிவு செய்து அரை ஏக்கர் நிலப் பகுதியில் வீட்டுத்தோட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன்படி 450 பயனாளிகள் தமது சொந்த நிலங்களிலும், 50 பயனாளிகளை ஒன்று சேர்த்து கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனைக்கு உட்பட்ட நிலப் பகுதியில் பண்ணை முறையிலான பயிர்ச் செய்கையினை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன் போது குறித்த திட்டத்தின் பங்குதாரர்களுக்கு இத்திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், UNDP நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளபண்டார மற்றும் செயற்றிட்ட முகாமையாளர் தமிக் சந்திரசேகர, கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.