உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 114 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் வங்கதேச அணி தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினர். டி காக் 18 ரன்னில் வெளியேற, ரீசா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
பின்னர் இணைந்த ஹெய்ன்ரிக் கிளாசன் – டேவிட் மில்லர் இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் களம் இறங்கினர்.
குறைந்த இலக்காக இருந்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கால் வங்கதேச பேட்ஸ்மேன்களை எளிதாக ரன்கள் எடுக்க விடவில்லை. இதனால் தொடர்ந்து வங்கதேச அணி மீது அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது.
தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் 9 ரன்னும், ஷாண்டோ 14 ரன்களும், லிட்டன் தாஸ் 9 மற்றும் ஷகிப் அல் ஹசன் 3 ரன்கள் எடுத்தனர். இதன்பின்னர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த தவ்ஹித் ஹிருதாய் 37 ரன்களும், மகமதுல்லா 20 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்த வங்கதேச அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.