குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபிராமி, மம்தா மோகந்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள மகாராஜா திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, மகாராஜா திரைப்படம் தனக்கு ஐம்பதாவது திரைப்படமாக அமைந்தது மகிழ்ச்சி எனக் கூறினார்.
ஐம்பதாவது படம் மற்றும் அவரின் திரை பயணம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய விஜய் சேதுபதி, 50 படம் நடித்துவிட்டேன், உங்களுக்கு தெரியாது நான் நடித்த பல படங்களில் முழுமையான சம்பளம் வந்து சேரவில்லை செக் பவுன்ஸ் ஆகி இருக்கும், அல்லது சம்பளம் பாக்கி வைக்கப்பட்டு இருக்கும். இருந்தாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் ஆதரிக்கிறேன். அதற்காகவே திரைப்படங்களில் நடிக்கிறேன் எனவும் கூறினார். அதேபோல் கடைசி விவசாயி திரைப்படத்தில் ஆன்மீகம் தொடர்பான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்த கேள்விக்கு, ஆன்மீகத்தை உணர்வது மிகவும் கடினம்.
அந்த நிலைக்கு, நான் இன்னும் வரவில்லை. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நிறைய கஷ்டப்பட்டேன் என விஜய் சேதுபதி கூறினார். மேலும், நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி எனவும் விஜய் சேதுபதி பெருமிதம் அடைந்தார். மேலும், தன்னுடைய திரை பயணத்தில் வெற்றி தோல்வி அனைத்தையும் சமமாகவே எடுத்துக் கொள்வதாகவும், விமர்சனங்களையும் அவ்வாறே பார்ப்பதாகவும் கூறினார்.
அதேபோல், நடிகை மம்தா மோகன்தாஸ் பேசுகையில், இந்த திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தது சந்தோஷமாக உள்ளதாக கூறினார். இவரைப் போலவே நடிகை அபிராமி பேசுகையில், விஜய் சேதுபதி திரைப்படம் என்றதுமே கதையை கூட கேட்காமல் முதலில் ஒப்புக்கொண்டேன். அதற்குப் பிறகு கதை கேட்டேன் என கூறினார். அதே சமயம் மகாராஜா திரைப்படம் அனைவருக்கும் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் அதற்கான முயற்சியை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் செய்திருக்கிறார் என படக் குழுவினர் அனைவரும் தெரிவித்தனர்.