உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 120 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியை, இந்திய பவுலர்கள் கையாண்ட விதம் பாராட்டை பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் பவுலர்கள், இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 31 பந்துகளில் 42 ரன்களும், அக்சர் படேல் 18 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் திணறடித்தனர்.
கேப்டன் பாபர் ஆசம் 10 பந்தில் 13 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த உஸ்மான் கான், பகர் ஜமான் ஆகியோரும் தலா 13 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் நேர்த்தியான ஃபீல்டிங்கால் பாகிஸ்தான் அணி வீரர்கள் ரன்கள் எடுக்க போராடினர். இருப்பினும் விக்கெட்டை காப்பாற்ற முடிந்ததே தவிர ரன்கள் சேர்க்க முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.