நரேந்திர மோடியின் அரசியல் பயணம்

இந்திய அரசியல் வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு யாரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதராக இருந்தது இல்லை என்ற வரலாற்றை, பிரதமர் மோடி மாற்றிக் காட்டியிருக்கிறார். நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ள அவர், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்.

அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் மகனானப் பிறந்த மோடி, இந்தியாவின் பிரதமர் பதவியை, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏற்கும் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு, ஒருவர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு மட்டுமே உண்டு. அந்த வரலாற்றில், பிரதமர் மோடியும் தன்னை இணைந்துக் கொண்டுள்ளார்.

குஜராத்தின் வத்நகரில் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி முல்சந்த் மோடி- ஹீரா பென் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் நரேந்திர மோடி.

வத்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்கும் சாதாரண நபராக இருந்த முல்சந்த் மோடிக்கு, அவரது மகனான மோடி அவ்வப்போது தேநீரை ரயில்களுக்கு கொண்டு சென்று விற்க உதவி இருக்கிறார்.

குடும்பத்தில் 5 மகன்கள் மற்றும் ஒரு மகளின் உணவுத் தேவையை சமாளிக்க, மோடியின் தாயார் ஹீராபென், பிற வீடுகளில் சென்று பணியாற்றியும் உள்ளார்.

பள்ளிப் பருவத்தில் சராசரி மாணவனாக திகழ்ந்த நரேந்திர மோடி, பள்ளி அளவிலான நாடகங்களில் நடித்ததுடன், பேச்சுப் போட்டியிலும் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். இருப்பினும், அரசியல் தொடர்பே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மோடிக்கு, அரசியல் ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான்.

தனது எட்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மோடி, ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் நடத்தப்பட்ட பேளூர் மடத்தில் சில வாரங்கள் தங்கியிருந்த போது, ஆன்மிகம் மீதான ஈடுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் 1960-களில் இறுதியில் ஆர்.எஸ்.எஸ்-ன் நிரந்தர உறுப்பினராக இணைந்த மோடியின் வீடாக, மணி நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மாறியது. ஊழல் அரசுக்கு எதிரான பரப்புரைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோடி, 1975ஆம் ஆண்டு அவசர நிலை கால கட்டத்தில், தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு சில காலம் வாழ்ந்தார்.

அப்போது அவருக்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வழங்கப்பட்ட பணி என்பது, சிறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வது தான்.

பின்னர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல பதவிகளை வகித்த மோடியின் ஒருங்கிணைப்பு திறமையைப் பார்த்த எல்.கே. அத்வானி, அவரை பாஜகவின் அமைப்புச் செயலாளராக 1987-ல் நியமித்தார். 1990-ஆம் ஆண்டு அத்வானியின் ரத யாத்திரைக்கான வியூகத்தை வகுத்துக் கொடுத்த மோடி, கட்சியின் தேசிய செயலாளராகவும் 1991ல் நியமிக்கப்பட்டார். குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற பாஜக, சட்டமன்றத் தேர்தலிலும் முத்திரை பதித்தது. இதன் மூலம் கேசுபாய் படேல் குஜராத் முதலமைச்சரானார்.

அதன் பின் குஜராத் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி, அரசியல் ரீதியாகவும் தவிர்க்க முடியாத நபராக உருவெடுத்தார். பின்னர் பல்வேறு அரசியல் சூழல் மாற்றங்களால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பரிந்துரையின் பேரில் கேசுபாய் படேலுக்கு பதிலாக குஜராத் முதலமைச்சராக 2001ஆம் ஆண்டு மோடி நியமிக்கப்பட்டார்.

2002ஆம் ஆண்டு கோத்ரா கலவர சம்பவத்தில் வன்முறையாளர்கள் கட்டுப்படுத்த வில்லை என மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சுதந்திர இந்தியாவில், மிகக் கொடுரமான வகுப்பு வாத கலரவம் என்றும் இது வர்ணிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக 2007, 2012ஆம் ஆண்டுகளில் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதலமைச்சராக பணியை தொடர்ந்த மோடி, 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா தேசிய செயற்குழுவால் அறிவிக்கப்பட்டார். அப்போது முதல் இப்போது வரை பாஜகவிற்கு அடுத்த பிரதமர் வேட்பாளர் பற்றிய சிந்தனையே ஏற்படாத அளவிற்கு பிரதமர் மோடி தனது அரசியல் ஆளுமையை, வலிமையான தலைவர் என்ற உணர்வை கட்சித் தலைவர்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற போது, ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு அவர் தான் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்கப் போகிறார் என்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை. ஆனால், அந்த வரலாற்றை பிரதமர் மோடி தற்போது நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.