தோனி நினைத்தால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆகலாம்..!

அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைக்க வழி கண்டுபிடித்து வைத்துள்ள தோனி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக முடியும் என்று மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்து கேப்டனாக மிளிர்ந்த எம்.எஸ்.தோனி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர். அவரது ஓய்வுக்குப் பிறகு இந்தியா இன்னும் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்லவில்லை. இந்திய அணியில் ரன் மெஷின்களாக விளங்கும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருந்தாலும், ஐசிசி கோப்பை இந்திய அணியின் வசம் வரவில்லை.

இந்நிலையில், 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், தோனியின் பண்பு குறித்து பேசியுள்ளார். தோனி மிகவும் தன்னலமற்ற கிரிக்கெட் வீரர் என்றும், அவர் விரும்பினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

“தோனி மிகவும் எளிமையானவர் என்பதால், அவர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து கேப்டனாக இருக்க முடியும், ஏனெனில் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்று நம்புகிறவர். அவர் எவ்வளவு பெரியவர் அல்லது அவர் என்ன சாதித்தார் என்று ரசிகர்களிடம் ஒருபோதும் பேசமாட்டார். அதுதான் தோனி. அவர் ஈகோ இல்லாத மனிதர்” என மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.