ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 29 ரன்களும், ஜோஷ் இங்லீஸ் 11 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி, ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து இணைந்த கோலி – ஷ்ரேயாஸ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 45 ரன்னில் வெளியேற, சிறப்பாக விளையாடிய கோலி அரை சதம் கடந்தார்.

அக்சர் படேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

48.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 42 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.