பாகிஸ்தான் முதல் மேட்ச்சில் தோல்வி!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நாட்டின் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இதனால் அந்த அணி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கராச்சி தேசிய மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கியது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். கான்வே 10 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேறினார். டேரில் மிச்சல் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து 4-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் 4-ஆவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வில் யங் 107 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக 118 ரன்கள் சேர்த்த டாம் கடைசி வரை களத்தில் நின்றார். கிளென் பிலிப்ஸ் 20 ஓவர் போட்டியை போன்று விளையாடி 39 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 320 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் சவுத் ஷகீல் 6 ரன்களும், அடுத்து வந்த கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்களும் எடுத்தனர். பாபர் ஆசம் 64 ரன்களும், பகர் சமான் 24 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அதிரடியாக விளையாடிய சல்மான் அகா 42 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் குஷ்தில் ஷா 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் 47.2 ஓவர்கள் தாக்குப் பிடித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.