“அறிவை பகிர்வதற்கான இடமாக இருக்கும். எனக்கு இது தாய் வீடு போன்றது. சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, அகரம் புதிய அலுவலகம் திறப்பு நாள் சந்தோஷமாக இருக்கிறது” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சினிமாவைத் தாண்டி நடிகர் சூர்யா கல்விக்காக பல வகையில் உதவி வருகிறார். அவர் தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அகரம் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டது.
இதில் சூர்யா பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக இயக்குநர் த.செ.ஞானவேல் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “கஜினி படத்தை முடித்த பிறகு 2006-ம் ஆண்டு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர்கள் அன்பை திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்த விதைதான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
பொருளாதார நெருக்கடியால் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிவிடுகிறது என த.செ.ஞானவேல் கேட்ட கேள்விதான் அகரம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. அப்போது 10-க்கு 10 அறையில் தான் தொடங்கினோம்.
அதன்பின் 2 அறைகள் கொண்ட வீட்டில் அகரம் பணிகள் நடந்தது. பின்னர் என் தந்தை சிவக்குமார் கொடுத்த இடத்தில் பணிகளைத் தொடர்ந்தோம். 2010ஆம் ஆண்டுதான் விதை என்ற திட்டம் தொடங்கினோம். அரசுப் பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள், மாணவிகளை கல்லூரியில் சேர்க்கும் திட்டமே விதை. அவர்கள் அனைவருமே முதல் தலைமுறை மாணவர்கள்.
5,813 மாணவ, மாணவிகள் படித்து முடித்துள்ளார்கள். இன்னும் 2 ஆயிரம் பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை அரசுப் பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவிகிதத்திற்கு மேல் மாணவிகள் தான் படிக்கிறார்கள். 2010-ல் 100 மாணவர்களை படிக்க வைக்க விரும்பினோம். அப்போது 10,000 விண்ணப்பங்கள் வந்தது.
இப்போது ஆண்டுக்கு 700 மாணவர்களை படிக்க வைக்கிறோம். அதேபோல் இப்போதும் 10,000 விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக தேவைகள் குறையவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம். 20 ஆண்டுகள் தொய்வடையாமல் வீரியத்துடன் அகரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இடம் படிப்புக்காக கொடுத்த நன்கொடையில் வாங்கிய இடம் கிடையாது. எனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம் கட்டிய இடம். நன்கொடையாக வரும் ஒவ்வொரு காசும், படிப்புக்காக பயன்படுத்துகிறோம்.
அறிவை பகிர்வதற்கான இடமாக இருக்கும். எனக்கு இது தாய் வீடு போன்றது. சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, அகரம் புதிய அலுவலகம் திறப்பு நாள் சந்தோஷமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.