விரைவில் சினிமாவை விட்டு வெளியேறப்போவதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அதே சமயம் தனது வளர்ச்சிக்கு சிலர் இடையூறாக இருப்பதாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இவர் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றதால் இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் 21ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் Pre Release நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா உலகைச் சேர்ந்த பலரும் இதில் பங்கேற்றனர்.
‘பாட்டல் ராதா’ பட நிகழ்ச்சியில் பேசிய பேச்சால் சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின் இந்நிகழ்ச்சியில் மேடை ஏறியபோது, ரசிகர்கள் உற்சாகமாகக் கூச்சலிட்டனர். பின்னர் பேசிய அவர், நிகழ்ச்சிகளில் கொஞ்ச காலம் கலந்துகொள்ளக்கூடாது என முடிவெடுத்து இருந்ததாகக் குறிப்பிட்டார்.
கெட்டவர்கள் அதிகம் மிகுந்த சினிமாவில், தான் மிகவும் கஷ்டப்படுவதாகக் குறிப்பிட்டதுடன் சினிமாவிலிருந்து விரைவில் விலகவுள்ள இயக்குநர் எனவும் தன்னை அவர் குறிப்பிட்டார். மிஷ்கினின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன், தனது வளர்ச்சிக்கு சிலர் இடையூறாக இருப்பதாகத் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குக் குடைச்சல் கொடுப்பது யார் என பிரதீப் ரங்கநாதன் குறிப்பிடாத நிலையில் அது யாராக இருக்கும் என்ற விவாதமும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.