கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித்!

துபாய் கார் ரேசிங்கில் அஜித்தின் அணி 3-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியது. இதற்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


நடிகர் அஜித், கார் ரேசிங் அணியை வாங்கியபோதும், ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியபோதும் எள்ளி நகையாடியோருக்கு தன் பாணியில் பதில் அளித்து வாயை அடைத்திருக்கிறார் ஏகே.

துபாயில் நடைபெறும் போர்ஷே ஜிடி 911 ரேசிங் கார் பந்தயத்தில் அணியில் இருந்து கடைசி நேரத்தில் அஜித் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

எனினும், தனி நபர் போட்டியில் அஜித் களம் காண்பார் என அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதைவிட மகிழ்ச்சியடையும் தருணம் துபாயில் நடந்தது. அவர்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தது. ஆம். துபாய் பந்தயத்தின் ஒரு அங்கமான 992 பிரிவில் அஜித் குமார் ரேசிங் 3-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியது. இதனால், உற்சாகத்தின் உச்சிக்கே போன அஜித், குழந்தை போல் துள்ளிக் குதித்து வீரர்களோடு தோள் சேர்ந்து கொண்டாடினார்.

மேலும், மைதானத்தில் ஓடிச் சென்ற அஜித், கைகளால் ஹார்ட்டின் வரைந்து அணியினருக்கு அன்பை வெளிப்படுத்தினார். மைதானத்தில் தேசியக் கொடியை பெருமிதத்துடன் ஏந்தியபடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ப்ளையிங் கிஸ்சும் கொடுத்தார்.

அப்போது அங்கு வந்த நடிகர் மாதவன், அஜித்துக்கு தான் Fan ஆகிவிட்டதாக அகமகிழ்ந்ததுடன், அஜித்தை கட்டி அணைத்து பாராட்டினார்.

துபாய் ஆட்டோடிரோம் சர்க்யூட் தலைவராக உள்ள இந்தியரான இம்ரான், தன் 20 ஆண்டு கால சர்வீஸில் கண்களில் முதல் முறையாக கண்ணீர் துளிகளை அஜித் வரவழைத்ததாக கூறினார். அதில், “என்னை நம்ப முடியவில்லை. என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்த அஜித்துக்கு நன்றி. இந்த தேசியக்கொடி பறக்காதா என பலகாலமாக நான் ஏங்கியதுண்டு. இவரை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். நேர்மையானவர், அழகான குடும்பம், நண்பர்கள் என சிறப்பானவர்.” என இம்ரான் நெகிழ்ந்தார்.

இது எல்லாவற்றை விட முத்தாய்ப்பாக கணவர் சாதித்ததை எண்ணி பெருமிதம் கொண்ட ஷாலினி, மகள் சகிதம் சென்று அன்பு முத்தமிட்டு வாழ்த்தினார். அஜித்தும் ஷாலுவுக்கு நன்றி சொல்லத் தவறவில்லை.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை தன் அணி கார்களில் அஜித் பொறித்துள்ள நிலையில், அவரது அணி வெற்றிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மநீம தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் என வாழ்த்து மலர்கள் குவிந்தவண்ணம் உள்ளன.