பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்..!

மயக்கும் குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்ட பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

80களில் அறிமுகமாகி, விஜயகாந்த்-இளையராஜா கூட்டணியில் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர். 1944 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த ஜெயச்சந்திரன் சென்னைக்கு வந்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பிறகு மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பாட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா இசையில் மென்மையான குரலில் இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகின.

“அந்த 7 நாட்கள்” படத்தில் “கவிதை அரங்கேறும் நேரம்”, “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் இவர் பாடிய “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சம்”, இவர் குரலில் உருவான அழகிய பாடல்களில் முக்கியமானவை. “கடல் மீன்கள்” படத்தில் “தாலாட்டுதே வானம்”, “செவ்வந்தி” படத்தில் இடம்பிடித்த “செம்மீனே, செம்மீனே” பாடலும் கிளாசிக் பாடல்களில் முத்தாய்ப்பானது.

“கடலோர கவிதைகள்” படத்தில் இவர் பாடிய “கொடியிலே மல்லிகப்பூ” பாடல் என்றென்றும் ரசிகர்களின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.

ரஜினி, கமல், பாக்யராஜ், விஜயகாந்த், ஆகியோரின் படங்களில் இளையராஜாவுடன் பயணித்த பி.ஜெயச்சந்திரன், “கிழக்குச்சீமையிலே” படத்தில் “கத்தாழங் காட்டு வழி” பாடல், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் “சின்னப்பூவே மெல்லப்பேசு”, “சொல்லாமலே யார் பார்த்தது” உள்ளிட்ட பாடல்கள் ஜெயச்சந்திரன் குரலில் உருவான காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்.

இப்படி, சோகம், காதல், ஏக்கம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளுக்கு தனது மயக்கும் குரலால் உயிர் கொடுத்திருந்த ஜெயச்சந்திரன், எம்எஸ் விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் வரை ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த பாடகருக்காக 4 முறை மாநில விருதுகள் ஜெயச்சந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார். மண்ணுலகை விட்டு அவர் மறைந்தாலும் “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” போன்ற பாடல்களால் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார்.