மலையாள சினிமாவில் அறிவுத்திறன் அதிகமாக இருப்பதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். டொவினோ தாமஸ், திரிஷா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகிய IDENTITY திரைப்படம் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கலந்துகொண்டு பேசிய திரிஷா, மலையாள சினிமா எழுத்தாளர்களின் கதை தேர்வும், பெண் கதாபாத்திர வடிவமைப்பும் அழகாக இருப்பதாக கூறினார்.
நிகழ்ச்சியின்போது திரிஷா பேசியதாவது-
மலையாள சினிமா மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் உண்டு. அவர்களின் படம் அறிவுபூர்வமாகவும், எதைப் பார்த்தாலும் வித்தியாசமானதாக இருக்கும். வருடத்திற்கு குறைந்தது ஒரு மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.
சரியான நேரத்தில் தான் Identity பட குழுவினரை சந்தித்தேன். கதை கேட்ட முதல் 20 நிமிடங்களிலேயே நான் அந்த படத்தில் இடம்பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். டொவினோ தாமஸ் நடிக்கும் அனைத்து படங்களும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அவர் ஒரு லக்கி ஸ்டார்.
எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இந்த படத்தில் வினய்யுடைய கேரக்டர் அவ்வளவு அற்புதமாக இருக்கும். படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் நல்லவிதமாக உணர்ந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.
ரசிகர்கள் ஒரு படத்தை எப்படி வரவேற்கிறார்கள், ஒரு படம் எவ்வளவு வசூலை பெறுகிறது என்பதை கணிக்க முடியாது. ஆனால் ஐடென்டிடி படத்திற்கு வெளியான முதல் நாளிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் பார்க்கும் போது ஐடென்டிடி படத்தில் பல புத்தி கூர்மையான காட்சிகள் இருந்தன. இந்த படத்தில் இடம்பெற்றது பெருமையாக உள்ளது. இந்த படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டொவினோ தாமஸ், மொழி வாரியாக திரைப்படங்களை மக்கள் சுருக்கி பார்ப்பதில்லை என்று கூறினார். தமிழ்நாட்டிலும் IDENTITY இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.