சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 09 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சான்டர், இலங்கை அணியை முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைத்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 43 ஓவர்கள் 4 பந்துகள் முடிவில் 178 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் 23 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகள் வீழ்ந்து இலங்கை அணி இக்கட்டான நிலையில் இருந்த நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ (56), ஜனித் லியனகே (36) இணைப்பாட்டத்தின் மூலம் 87 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு சற்று ஆறுதல் அளித்தனர். வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
இன்று இலங்கை அணிக்காக எஷான் மலிங்கா ஒருநாள் போட்டிக்கான தொப்பியை கைப்பற்றியமை விசேட நிகழ்வாகும்.
சிறப்பாக பந்துவீசிய மேட் ஹென்றி தனது 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 26 ஓவர்கள் 2 பந்துகள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்தது.
அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.