ராஜமவுலி – மகேஷ்பாபு இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம்…!

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பாகுபலி 1, பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர். படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு உடன் இணைந்துள்ளார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மகேஷ் பாபு நடிக்கும் 29 ஆவது திரைப்படமாக இது அமைகிறது. வீர சாகசங்கள், சண்டை காட்சிகள் அடங்கிய திரில்லர் படமாக இந்த படத்தை ராஜமவுலி உருவாக்க உள்ளார்.

இதற்காக அடர்ந்த வனப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா வனப்பகுதியில் இந்த படத்துடைய முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா முன்னணி கேரக்டரில் நடிப்பார் என்று முன்பு தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் இதனை அவர் உறுதி செய்யவில்லை.

ராஜமவுலி இயக்கவுள்ள படத்துக்கு சர்வதேச அளவில் அறிமுகமான நடிகை தேவைப்படுவதால் பிரியங்கா சோப்ராவை பட குழுவினர் அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு பிரியங்கா சோப்ராவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.