உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற தென்னாப்பிரிக்கா!

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி இவ்வாறு தகுதிப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில்  வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 301 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

90 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து  237 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஒருகட்டத்தில் 99 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. 

அந்த சமயத்தில் ரபடா – யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ஓட்டங்கள் அடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

மேலும் முதல் முறையாக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.