ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் 8 ஆவது வீரராக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் விளாசி இந்திய அணியை வலுவடைய செய்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார். இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 2வது சதம் இதுவாகும்.
இதையடுத்து முதல் இன்னிங்சை இ்நதிய அணி தடுமாற்றத்துடன் தொடங்கியது. ஓபனிங் வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்னிலும் கே.எல்.ராகுல் 24 ரன்னிலும் அவுட்டாகினர். ஆனால் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்ரேட்டை உயர்த்தினர். 82 ரன்னில் ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் ரன் அவுட்டாக விராட் கோலியும் 36 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டை இழப்பிற்கு இந்திய அணி 159 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்றாம் நாளான இன்று பந்த் மற்றும் ஜடேஜா அவுட்டாக 221 ரன்களுக்கு 7 விக்கெட் என்று ஸ்கோர்போர்டு இருந்தது. இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா என்று தவித்து கொண்டிருந்த போது நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாடி அணியின் ரன்னை குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நியைில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் அவுட்டானார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 354 ரன்கள் எடுத்துள்ளது.