கஜகஸ்தானில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தரையிறங்கும் போது எப்படி விமானம் விபத்துக்குள்ளானது?
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Embraer-190 என்ற விமானம் தலைநகர் பாகுவில் (Baku) இருந்து ரஷ்யாவின் செசனியா மாகாணத்தில் உள்ள க்ரோஸ்னி (Grozny) நகரின் வடக்கு காகசஸ் நோக்கி சென்றது. விமானத்தில் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த 37 பயணிகளும், ரஷ்யாவை சேர்ந்த 16 பேரும், 6 கஜகஸ்தான் பயணிகளும், கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேரும் பயணித்து உள்ளனர். இவர்களுடன் விமான நிறுவனத்தின் 5 சிப்பந்திகளும் பயணித்தனர்.
க்ரோஸ்னி நோக்கி விமானம் சென்று கொண்டு இருந்த நிலையில், கடும் பனி மூட்டம், மோசமான வானிலை காரணங்களால் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானம் திருப்பி விடப்பட்ட நிலையில் நடுவானில் சென்று கொண்டு இருந்த விமானத்தின் மீது பறவை மோதியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க திட்டமிட்ட விமானி அது குறித்து கஜகஸ்தான் நாட்டின் அக்தவ் (Aktau) விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அக்தவ் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம், விமான நிலையத்தின் மூன்று கிலோ மீட்டர் அருகே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இரண்டாக விமானம் வெடித்து சிதறியதில் தீப்பற்றி விண்ணை முட்டும் கரும் புகை வெளியேறியது. இது குறித்து விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 100-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டு இருந்த விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இந்த விபத்தில் விமானிகள் உள்பட சுமார் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் நடந்து வந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணியின்போது வீரர்களின் உடலில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் பதிவான அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே விபத்துக்கு விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த வீடியோவும் வெளியாகியிருக்கிறது. விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்ததும் விபத்து எப்படி நடந்தது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியவரும்.