நான் போலியான கல்விச் சான்றிதழ்களை முன்வைத்ததில்லை. அவ்வாறு செய்திருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்.
தனது கல்வித் தகுதிகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.
நான் எனது எந்தவொரு சுயவிபரக் கோவையிலும் நான் பெற்றிராத எந்த தகுதியையும் குறிப்பிட்டில்லை. சகல விடங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் முன்வைத்துள்ளேன். இது தொடர்பில் உரிய நிறுவனங்களிடம் கேட்டறிந்தால் உண்மை மற்றும் பொய்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நான் கூறும் மற்றும் முன்வைக்கும் சகலதுக்கும் நான் பொறுப்புக் கூறுவேன். நான் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததுள்ளேன் என எங்காவது நிரூபிக்கப்பட்டால், எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி போலவே அரசியலில் இருந்தும் விலகுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது கல்வித் தகைமைகளுக்கு சவால் விடுத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும், தான் சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறவில்லை என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரம் மற்றும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் முகமாக இன்று(18) சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் எனது ஆரம்ப பாலர் பாடசாலைக் கல்வியை St Bridget’s Convent – Primary School இல் இருந்து ஆரம்பித்தேன். 1-5 ஆம் வகுப்பு வரை சென் தோமஸ் ஆரம்ப கல்லூரியில் கற்றேன். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கொழும்பு ரோயல் கல்லூரிக்கு சென்றேன். நான் இந்நாட்டில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை. கல்லூரி விடுகைப் பத்திர சான்றிதழ் கூட என்னிடமுள்ளது. நான் கனிஷ்ட மாணவர் பிரிவின் மாணவத்தலைவராக இருந்தேன். கிரிக்கெட் வீரராகவும் இருந்தேன். இதற்கான சான்றிதழ்கள் சகலதையும் நான் இன்று இவ்வாறு இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
இதன் பிறகு, இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில்(Mill Hill School) கல்வி கற்றேன். 1983 மற்றும் 1984 இல் சாதாரண தரப் பரீட்டைக்கு தோற்றினேன். சாதாரண தரப் பரீட்டையில் சித்தியடைவில்லையெனவும், 9W பெற்றதாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்தனர். அச்சமயத்தில் W என்ற தரம் இருக்கவில்லை. A தரமும் B தரமுமே காணப்பட்டன. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என்று பொய்யை பரப்புபவர்கள் நான் சமர்ப்பிக்கும் இந்த சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மில்ஹில் கல்லூரியில் கல்வி பயிலும் போது 1984 இல் ஹவுஸ் லீடர், 1985 கல்லூரி மாணவத் தலைவராகவும் இருந்திருக்கிறேன். 1986 வரை கிரிக்கெட் விளையாடி, 1985 இல் கிரிக்கெட் அணியின் செயலாளராகவும், 1986 கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறேன். இவற்றுக்கான சான்றாதாரங்கள் என்னிடம் உள்ளன. 1986 ஆம் ஆண்டில் உயர் தரப்பரீட்சையில் 3 இல் 2 அதாவது அரசறிவியல் பாடம் மற்றும் வணிகப் பாடம் ஆகியவற்றில் கல்லூரி பரிசில்களையும் பெற்றுள்ளேன். உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்களையும் சபையில் சமர்ப்பிக்கிறேன். இதன் பிரகாரம் உயர் தரப் பரீட்சையில் 2 B சித்திகளும் 1 C சித்தியும் எனக்கு இருக்கிறது. இந்த பெறுபேறுகளின் அடிப்படையில், நான் எனது பட்டப்படிப்பைத் தொடர லண்டன் பல்கலைக்கழகத்திற்குச் (London School of Economics and Political Science) சென்றேன். 1991 ஆம் ஆண்டு நான் எனது பட்டதாரி சான்றிதழ் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
London School of Economics and Political Science எனும் பல்கலைக்கழகத்தில் இருந்து எனக்கு வழங்கப்பட்ட கடிதங்களும் பட்டச் சான்றிதழ்களும் என்னிடமுள்ளன.
இதன் பிறகு, அமெரிக்காவில் உள்ள The University of Maryland, College Park
இல் Public Management துறையில் முதுகலைமாணி கற்கையை தொடரச் சென்றேன். இங்கு 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் 8 பாடங்களில், 6 A தர சித்திகளையும் 2 பாடங்களில் B தர சித்திகளையும் பெற்றேன். இந்த கல்விச் சான்றிதழ்களையும் இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.
1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி எனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.
அமெரிக்காவில் முதுகலைமாணி கற்கையை பயிலும் போது அமெரிக்க செனட் சபை உறுப்பினராக பதவி வகித்த Larry Fraser என்ற நபரிடம் 2 ஆண்டுகளாக தன்னார்வலராக பணியாற்றினேன். இதற்கான சான்றிதழ்களும் என்னிடம் இருக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதன் பின்னர், 2021 மற்றும் 2022 காலப்பகுதியில் திறந்த பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். இதில் சேர்ந்தமைக்கான அடிதளத்தை அங்கு விரிவுரையாளராக இருந்த பிரதமருக்கும் தெரியும். திறந்த பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். இங்கு பிரதமர் நடத்திய வகுப்புக்களிலும் கலந்து கொண்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.