ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவுதாக அறிவத்துள்ளார்.
மூன்றாவது போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 445 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அரை சதங்களால் பாலோஆனை இந்திய அணி தவிர்த்தது. போட்டியின் கடைசி நாளான இன்று, 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும், 31 ரன்களில் ஆகாஷ்தீப் ஆட்டமிழந்தார். இதனால், 260 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை ஆஸ்திரேலிய அணி கூடுதலாகப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமே 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட, இதில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை மளமளவென இழந்தது. அதிரடியாக ரன்களை குவித்து இந்திய அணிக்கு பெரிய டார்கெட்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மட்டையை சுழற்றினர். ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஆகாஷ்தீப், சிராஜ் ஆகியோர் வேகத்தில் மிரட்டி விக்கெட்களை சாய்த்தனர். 89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. தொடர் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு மத்தியில் மழையை வெறித்து பார்த்தபடி இந்திய வீரர்கள் விராட் கோலியும் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும் காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டன. அப்போது, அஸ்வினை பாராட்டி விராட் கோலி கட்டியணைத்தார். இரண்டு முறை அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து வெகுவாக பாராட்டினார்.
இந்த காட்சிகளை வைத்து அஸ்வின் ஓய்வு பெறப்போகிறார் என்றும், அதனை தான் விராட் கோலியிடம் பேசியிருப்பார் இணையங்களில் தகவல் பரவியது. இதனிடையே டெஸ்ட் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டதும் கேப்டன் ரோஹித் சர்மா உடன் இணைந்து ரவிசந்திரன் அஸ்வினும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரவிசந்திரன் அஸ்வின் 537 விக்கெட்களையும் 3503 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்போட்டிகளில் 6 சதம் அடித்துள்ள அஸ்வின் 14 அரைசதங்களையும் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்களில் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். 2010 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களம் கண்டார் ரவிசந்திரன். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ரவிசந்திரன் அஸ்வின் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.