டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 898 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அதே அணியைச் சேர்ந்த ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (812), இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (811) ஆகியோர் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 140 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 781 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் கமிந்து மெண்டிஸ் (759) ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் தெம்பா பவுமா (753) 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் (729) 3 இடங்களை இழந்து 8-வது இடத்துக்கும், இந்தியாவின் ரிஷப் பந்த் (724) 3 இடங்களை பறிகொடுத்து 9-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் சவுத் ஷகீல் (724) புள்ளிகளுடன் 10-வது இடத்தில் தொடர்கிறார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 661 புள்ளிகளுடன் 6 இடங்களை இழந்து 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா 856 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 851 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பாட் கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் நேதன் லயன், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, நியூஸிலாந்தின் மேட் ஹென்றி, பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.