தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அவரது பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், மகிழ்திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு கலகத்தலைவன் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் ”விடா முயற்சி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை அஜர்பைஜானில் சில நாள்களுக்கு முன் துவங்கினார். தற்போது, தனக்கான டப்பிங்கை அவர் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.