அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அமோக வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 337 ரன்களை குவித்தது.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் (டிச.7) ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களுடன் தடுமாறியது. மூன்றாவது நாளான இன்று (டிச.8) ஆட்டம் தொடங்கிய நிலையில், ரிஷப் பந்து 28 ரன்களில் விக்கெட்டானார். தொடர்ந்து அஸ்வின் 7 ரன்களிலும், ஹர்ஷித் ராணா டக்அவுட்டாக, நிலைத்து ஆடிய நிதிஷ் ரெட்டி 42 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் சிராஜ் 7 ரன்களில் விக்கெட்டாக 36.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 175 ரன்களை சேர்த்தது.

19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய நாதன் மெக்ஸ்வீனியும், உஸ்மான் கவாஜாவும் இணைந்து விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தனர். நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்களுடம், காவாஜா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 1-1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளனர். இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களிலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது.