தலைமன்னார் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள்..!

தலைமன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக அத்துமீறி இலுவைப்படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட இரு படகுகளிலிருந்து 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (04) இரவு இந்திய இரேமஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் பகுதியிலிருந்து வந்த இரு இலுவைப் படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மன்னார் கடற் பிராந்தியத்திற்குள் உட்புகுந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களை சட்டநடவக்கைக்காக கடற்படையினர் மன்னார் கடற்தொழில் நீரியல்வள திணக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (05) முன்னிலைப் படுத்தப்பட்டபோது இவ் 14 சந்தேக இந்திய மீனவர்களை எதிர்வரும் 19ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

தேவசகாயம் பெற்றிக் (தங்கச்சிமடம்) , கெல்வின் லியோன் அந்தோனி விஸ்பன்  (தங்கச்சிமடம்) , ஜோசப் சானிய எமர்சன் (தங்கச்சிமடம்) , விஜயகுமார் ஜோபு (தங்கச்சிமடம்) , சந்தியோகு றிச்சன் (தங்கச்சிமடம்) , ஆரோக்கியதாஸ் திசாத் (தங்கச்சிமடம்) , ஜெஸ்மின் பரலோக மேட்சன் வினித் (தங்கச்சிமடம்) ,

சன்முகம் முனிஸ்வரன் (இராமேஸ்வரம்) , சீனி பாண்டி அரவிந் பாண்டி (இராமேஸ்வரம்) , சீனி பாண்டி ராஜ்பிரபு (இராமேஸ்வரம்) , அருளப்பன் ஆரோக்கியம் (இராமேஸ்வரம்) , எடிசன் றிபக்சன் (இராமேஸ்வரம்) , வியாகுலம் ராபின்ஸ்டன் (பாம்பன் வெளிச்ச வீடு) , ஸ்டிபன் பிரசாந் (தங்கச்சிமடம்) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு இலுவைப் படகுகளும் தங்கச்சி மடத்தைச் சார்ந்த அந்தோனிசாமி மெகோவுக்கும் . இராமேஸ்வரம் அந்தோனியார்புரம் பகுதியைச் சார்ந்த சே.பிறிட்டோ என்பவர்களுக்கே உரிமையானதானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் படகில் பயணிக்கவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)