புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் நேற்று முன்தினம் (05.12.2024) பிரம்மாண்டமாக வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க பின்னணி இசையில் சாம் சி.எஸ் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 294 கோடி வசூலித்தாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக ஹைதரபாத்தில் நடந்த சிறப்பு காட்சியின் போது திரையரங்கிற்கு வருகை தந்த அல்லு அர்ஜூனால் கூட்டம் அதிகமாகி, படம் பார்க்க வந்த ரேவதி(39)என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அக்குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவித்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன், படம் பார்க்க வந்த ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதற்கு வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சந்தியா திரையரங்கில் நடந்த சோகமான சம்பவம் என் மனதை உடைத்துவிட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் துயரத்தில் இருக்கும் அந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த வேதனையில் அவர்கள் தனியாக இல்லை என்பதை நான் உறுதியளிக்கிறேன். விரைவில் அவர்களை சந்தித்து இனிமேல் அவர்கள் பயணிக்க தேவையான உதவிகளை செய்யவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அந்த குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.