சீனாவில் ‘2.0’ படத்தின் வசூலை முறியடித்த ‘மகாராஜா’ !

சீனாவில் திரையரங்குகள் அதிகம் என்பதால், எப்போதுமே ஒரு தமிழ் படம் வெளியானால் வசூல் விவரங்கள் ஆச்சரியப்படுத்தும். அந்த வரிசையில் ‘மகாராஜா’ படத்தின் வசூலைப் பார்த்து வர்த்தக நிபுணர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தின் வசூலை 4 நாட்களில் கடந்துவிட்டது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’.

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானவுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்று சாதனையை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ப்ரிவ்யூ திரையிடல் வகையில் 4.61 மில்லியன், முதல் நாள் 3.88 மில்லியன், 2-ம் நாளில் 7.9 மில்லியன், 3-ம் நாளில் 6.09 மில்லியன் ஆகியவை சீனா ரூபாய் மதிப்பில் வசூலித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 26.26 கோடி இந்திய மதிப்பாகும்.

சீனாவில் ‘2,0’ திரைப்படம் ஒட்டுமொத்த ஓட்டத்தில் 26 கோடி ரூபாய் தான் வசூலித்தது. தற்போது அதைத் தாண்டி சாதனை புரிந்திருக்கிறது ‘மகாராஜா’ திரைப்படம். மேலும், சீனாவைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் ‘மகாராஜா’ வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.