மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.
மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டி பி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.
கடந்த காலங்களில் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
குறிப்பாக 2010 – 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
அண்மையில் சிநேகிதபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.
அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆக, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.