டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி!

பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த பதினைந்தாவது பட்டமளிப்பு விழாவில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பேட்மிண்டன் வீரர் கோபிசாந்த் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று (டிச.1) நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு சுமார் 4 ஆயிரம் பேருக்கு பட்டங்களை வழங்கினார். அதேபோல் 4 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதன்படி கலை பிரிவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு டாக்டர் பட்டமும், விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீரர் பத்ம பூஷண் கோபிசாந்த் மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்த நேச்சுரல் குடும்ப தலைவர் சி.கே.குமாரவேல் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா செய்தியாளரிடம் பேசும் போது, டாக்டர் பட்டம் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருவதாகவும், விரைவில் கோலிவுட் திரைப்படங்களிலும் தன்னை பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். அதேபோல் ஜனவரி மாதம் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் கூறினார்.


விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.