19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (01) இடம்பெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள் 131 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டினர்.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர், அனைவரும் ஆட்டமிழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
இலங்கை இன்னிங்ஸை பலப்படுத்திய சரூஜன் சண்முகநாதன் 132 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Nazifullah Amiri அதிக ஓட்டங்களைப் பெற்றார். இவர், 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ஓட்டங்களைப் பெற்றார். மேலும், Hamza Khan 61 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் பிரவீன் மனீஷான் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், சிறந்த பந்துவீச்சாளராக பதிவானார். மேலும், விஹஸ் தேவ்மிக, விரன் சமுதித மற்றும் நியூட்டன் ரஞ்சித்குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் குகதாஸ் மாதுலன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் இலங்கை பங்கேற்கும் அடுத்த போட்டி நாளை (03) பங்களாதேஷ் அணிக்கு எதிராக டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.