பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்..!

“தொற்றா நோய்களை” முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு முன்கூட்டியே தயாராக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. “ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை” என்ற கருப்பொருளின் கீழ். தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான சுகாதார நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று (28) அலரி மாளிகை பிரதான மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுநீரக இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரோல் பரிசோதனை, பல் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை என பல மேற்கத்திய மற்றும் சுதேச மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ளும் வாய்ப்புகள் இங்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர்களான ஹர்ஷ விஜேவர்தன, மஹிந்த குணரத்ன உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.