கடந்த 23 ஆம் திகதி ஆரம்பித்த மழையானது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னாரில் மழை நேற்று வரை (27) உக்கிரம் அடைந்துள்ளது.
இந்த கனமழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 15659 குடும்பங்களைச் சார்ந்த 53937 பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதைவிட 1800 குடும்பங்களைச் சேர்ந்த 5884 பேர் 55 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டதாக காணப்படுகின்றன.
அத்துடன் மல்வத்தோயாவிலிருந்து மன்னாருக்கு நீரின் வருகை அதிகமாக காணப்படுவதால் மன்னார் மாவட்டத்தில் முக்கிய குளமாக காணப்படும் கட்டுக்கரைக்குளமும் நிரம்பி வழியத் தொடங்கி வான்பாய தொடங்கியுள்ளது.
மல்வத்தோயாவிலிருந்து மன்னாருக்கு நீர் அதிகமாக காணப்படுவதால் நானாட்டான் மற்றும் மடுக்கரை பகுதியிலுள்ள மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் வடக்கு மாகாண நீர்பாசனத்துக்கு சொந்தமான முக்கியகுளமாகிய பெரியமடு குளமும் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இது 6 அடிக்கு மேல் நீர் பாய்வதால் குளத்துக்கு பாதிப்பு ஏற்படாதிருக்க இதன் அணைக்கட்டு ஒரு பகுதி வெட்டப்பட்டு நீர் வெளியேற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று (27) மன்னாரிலுள்ள வெள்ளப் பெருக்கை நேரில் பார்வையிடவும் இதை கட்டுப்படுத்தும் தொடர்பாக ஆராயவும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருனகே ஜெயசேகர அவர்கள் வருகை தந்து இது தொடர்பாக ஆராய்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வெள்ளநீரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னாரில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.. அத்துடன் இப்பகுதி மக்கள் தொடந்தும் இடம்பெயர்ந்து வருகின்றமையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. என மன்னார் மாவட்ட அரசாந்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)