சீரற்ற காலநிலை-தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (27) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது உயிரின் பாதுகாப்பிற்காக உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறு தெரிவித்தார்.

“மத்திய மலையகப் பகுதியில் மழை பெய்து வருகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு சரிவுகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்து, மெததும்பர, கங்கவடகோரல, உடுதும்பர, தோலுவ, யட்டிநுவர, உடபாலத்த, பத்தஹேவஹட , தெல்தோட்டை, பாததும்பர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, அம்பகமுவ, அம்பகமுவ கோரளை, ரத்தோட்ட, நாவுல மற்றும் உக்குவெல மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வாரப்பனே ஆகிய பிரதேசங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே அங்கிருந்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

இதன்போது, ​​கவனக்குறைவாக செயற்பட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“வீட்டில் உள்ள பல்வேறு பொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும். அவற்றை எடுக்க முயற்சிக்காதீர்கள். அதில் உங்கள் உயிரை இழக்க நேரிடும். தண்ணீரில் விளையாடாதீர்கள். பெற்றோர்களே குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுங்கள்..”

தமிழ் பேசும் மக்கள் சீரற்ற காலநிலை தொடர்பில் தெரிவிக்க அல்லது உதவி பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்காக 107 என்ற தொலைபேசி இலக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.