மன்னாரில் 5088 ஹெக்டர் பயிர்ச் செய்கை முற்றாக அழிவு..!

மன்னாரில் நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையினால் தொடர்ந்து பாதிப்பு நிலவி வருகின்றது. கட்டுக்கரைக் குளமும் நிரம்பும் நிலை எற்பட்டுள்ளது. விதைக்கப்பட்ட நெற் செய்கையில் 5088 ஹெக்டர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளது. என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் செவ்வாய் கிழமை (26) நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையானது இப்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் வலுவடைந்துள்ளது.

தற்போதைய நிலமையின்படி 13860 குடும்பங்களைச் சேர்ந்த 48195 பேர் மழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

இதனைவிட மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் . மடு , மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களில் பொது மக்கள் பாரியளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த வகையில் 22 பாதுகாப்பு மையங்களில் 589 குடும்பங்களைச் சேர்ந்த 2049 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதுள்ள காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகி கொண்டிருக்கின்றது.

தற்பொழுது நீடித்து வரும் மழையின் காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் நிலவாதிருக்கும் முகமாக இவர்களை பரீட்சை மண்டபங்களுக்கும் அழைத்துச் செல்லும் பணிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரிலுள்ள வெள்ள அனர்த்தங்களை மதிப்பீடு செய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருனகே சேகரா மன்னாருக்கு வருகை தர இருக்கின்றார். இவர் இங்குள்ள திணைக்கள உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பை மேற்கொள்ள இருக்கின்றார்.

புதன்கிழமை (27) வடக்கு மாகாண ஆழுநர் வெள்ள நிலைவரத்தை மதீப்பீடு செய்வதற்காக மன்னாருக்கு வருகை தந்து இதற்கான அறிவுரைகளையும் தருவதற்கு இருக்கின்றார்.

தற்பொழுது பெய்து வரும் கன மழை காரணமாக காலபோகத்திற்காக இதுவரை பயிர் செய்கைப்பண்ணப்பட்ட 9709 ஹெக்டர் நிலத்திலே 5088 ஹெக்டர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முக்கியமாகக் காணப்படும் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டமும் நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. தற்பொழுது 11 அடியாக இருக்கும் இந்த நீர் மட்டம் 11.5 அடிக்கு வந்ததும் இதன் நீர் மேவி பாயும் நிலை உருவாகி விடும்.

இதனால் மன்னாரில் வெள்ள நிலமை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகி விடும். இதன் பாதிப்பை தடுக்கும் முகமாக இந்த வெள்ளத்தை கடலுக்குள் வெளியேற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)