சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, நடித்து ஹிட்டான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. டிச. 5-ல் வெளியாக இருக்கும் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம், “உங்களின் வருங்கால கணவர் திரைத்துறையைச் சேர்ந்தவரா, வெளியிலிருந்து வரப் போகிறாரா?’ என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா, “இதற்கான பதில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்” என்றார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் ராஷ்மிகா முதன் முறையாக, விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் குறிப்பிடாமல் ஒப்புக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருக்கிறது.
இவ்விழாவில் அல்லு அர்ஜுன் பேசும்போது, “நான் பிறந்த இந்த மண்ணுக்கு வணக்கம். ‘புஷ்பா 2’ புரமோஷனுக்காக பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் சென்னை வரும் போது அந்த உணர்வே வேறு. என் வாழ்க்கையில் முதல் 20 வருடம் சென்னையில்தான் இருந்தேன். அதனால் நான் வாழ்க்கையில் என்ன சாதித்தாலும் என் அடித்தளமான சென்னைக்கு நன்றி சொல்வேன். நான் சென்னை பையன். நான் நேஷனல் போகலாம், இன்டர்நேஷனல் போகலாம், எங்கு போனாலும் சென்னை பையன்தான். நான் எவ்வளவு சாதித்தாலும் அதை என் ஆணி வேரான தமிழ் மண்ணுக்குத் தான் சமர்ப்பிப்பேன்” என்றார்.