ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை எளிதில் வீழ்த்தியது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களிலும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களிலும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்றும் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து போது டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 534 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவந்த ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே திணறி வந்தது.
3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். டிராவிஸ் ஹெட் – மிச்செல் மார்ஷ் மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
இறுதியில், இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 36 ரன்கள் எடுத்து இறுதிவரை போராடிய அலெக்ஸ் கேரியை ஹர்ஷித் ராணா வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், மிச்செல் மார்ஷ் 47 ரன்களும் எடுத்தனர்.
இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்திய கேப்டன் பும்ரா 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். காபா 2021, பெர்த் 2008, அடிலெய்டு 2008 என ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சமீப காலங்களில் வெற்றிகளை குவித்தாலும், அதைவிட இந்த டெஸ்டின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், ரோஹித், ஜடேஜா, அஷ்வின், ஷமி ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல், போட்டி முழுக்க ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய இளம்படை இந்த வெற்றியை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த மிகப்பெரிய (295 ரன்கள்) டெஸ்ட் வெற்றி இதுவாகும்! இதற்கு முன் 2018ல் மெல்போர்னில் 137 ரன்கள் வித்தியாசத்திலும், 1977ல் அதே மெல்போர்னில் 222 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.