இந்தியா ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது..!

பெர்த் டெஸ்ட் 3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அயலக மண்ணில் செலுத்தாத ஆதிக்கத்தை செலுத்தியதை பார்க்க முடிந்தது. இந்த ஆதிக்கத்தின் பின்னணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, ராகுல், பும்ரா ஆகிய நால்வர்கள் உள்ளனர்.

3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் உள்ளது. இதில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த கண்டிஷனில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பவுலர்கள் லெந்த்தைக் கண்டுபிடிக்க திணறியபோது ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு ஒரு விதத்தில் பழைய மேற்கு இந்தியத் தீவுகளை விடவும் ஆவேசமாக இருந்ததோடு சரியான லெந்த்தைக் கண்டுப்பிடித்து இந்தப் பிட்சில் 2 எல்.பி.டபிள்யூக்களை எடுத்தது அபாரமான பந்து வீச்சு.

அதுவும் அந்த கடைசி 10 நிமிடங்களில் ஆஸ்திரேலியா களமிறங்க விரும்பவில்லை. அதனால் கேப்டன் கம்மின்ஸ் தாமதம் செய்ய என்னென்னவோ உத்திகளையெல்லாம் கடைப்பிடித்து நடுவர் எச்சரிப்பதும் நடந்தது. மெக்ஸ்வீனிக்கு பும்ரா இரண்டு பந்துகளை அவுட் ஸ்விங் செய்து அடுத்த பந்தை வேகமாக அதே லெந்தில் பிட்ச் செய்து உள்ளே ஸ்விங் செய்ய பிளம்ப் இன் ஃப்ரண்ட் என்பார்களே, அந்த விதத்தில் எல்.பி.யின் விளக்கமாகவே முடிந்து போனார்.

அதே போல் லபுஷேனுக்கு வீசிய பந்தும் படு வேகமாக உள்ளே வந்த பந்து. அவர் ரியாக்ட் செய்யவே நேரமில்லை. கம்மின்ஸுக்கு இந்தப் போட்டியில் பவுலிங்கில் ஒன்றுமில்லாமல் போக கேப்டனாக 3-ம் நிலையில் இறங்கி கடைசியில் சிராஜ் பந்தை தொட்டு கெட்டார். கோலி அந்த கேட்சை எடுத்தார். ஆஸ்திரேலியா இது போன்ற ஒரு டெஸ்ட் போட்டியை இதுவரை எதிரணியின் முழு ஆதிக்கத்திற்கு விட்டிருக்குமா என்று தெரியவில்லை. கடந்த கால ஸ்கோர்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் ஒருவேளை தெரியலாம்.

இந்திய கிரிக்கெட்டுக்கு பொன்னான தினம். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அதுவும் அவர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட பெர்த் ஃபாஸ்ட் பிட்சில் கடைசியில் இந்திய அணி முற்றாதிக்கம் செலுத்தியுள்ள இந்த நாள் மறக்க முடியாதது.

ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஸ்விங் ஆகாமல் இந்திய பேட்டர்களின் எட்ஜையே குறிவைத்ததும் கம்மின்ஸ் தன் கேப்டன்சியில் மொத்தமாக நெகட்டிவ் அணுகுமுறையைக் கடைப்பிடித்ததும் இந்திய ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது. மாறாக இந்திய பவுலர்கள் ஸ்டம்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் பவுலிங் வீசினர். களவியூகமும் அட்டாக்கிங்காக இருக்க ஆஸ்திரேலிய களவியூகம் இந்திய பேட்டர்களுக்கு விஷயங்களை எளிதாக்கியது.

உச்சத்தை எட்டிய ஜெய்ஸ்வால்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 டெஸ்ட் போட்டிகளே ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் கொஞ்சம் மேலாகிறது. இந்தக் குறுகிய காலத்தில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மெக்கல்லம் சாதனையை உடைத்துள்ளார். 35 சிக்ஸர்களை ஒரே ஆண்டில் அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகளில் 171 ரன்கள் எடுத்தார். இப்போது பெர்த்தில் அதிக ஸ்கோர்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதே போல் மேலும் சில சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க கூட்டணி 201 ரன்கள் ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க வீரர்களுக்கான அதிகபட்ச ஸ்கோராகும். சிட்னியில் 1986-ல் கவாஸ்கர் ஸ்ரீகாந்த் கூட்டணி எடுத்த 191 ரன்களைக் கடந்தனர்.

இது ஆஸ்திரேலியாவில் மொத்தமாக 6-வது இரட்டை சத தொடக்கக் கூட்டணி ரன்களாகும். இதற்கு முன்னர் அங்கு இரட்டை சத ஓப்பனிங் கூட்டணி அமைத்த 5 சந்தர்ப்பங்களிலும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

23 வயது நிரம்புவதற்கு முன்னர் 4 முறை 150+ ஸ்கோர்களை எடுத்து டான் பிராட்மேனின் ஐந்து 150+ ஸ்கோர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 23-வது பிறந்த தினத்துக்கு முன்பாக ஜாவேத் மியாண்டட், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோரும் நான்கு 150+ ஸ்கோர்களை எடுத்திருந்தனர்.

விராட் கோலிக்கு சதம் அடிக்க ஏதுவாக சூழ்நிலை அருமையாக செட் ஆகியிருந்தது. அவரும் தனது கவர் ட்ரைவ்கள், பிளிக்குகள், அப்பர் கட், நேதன் லயனை அடித்த நேர் சிக்ஸ் என்று கலக்கினார். அவர் ஃபார்முக்கு வருவது இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை மேலும் சிதைக்க அவசியமானது. கோலி, சதம் எடுத்தவுடன் டிக்ளேர் செய்யப்பட்டது.

நிதிஷ் குமார் ரெட்டி இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆடிய இன்னிங்ஸ் மிகமிக முக்கியமானது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் அவர் எடுத்த 59 பந்து 41 ரன்கள் இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிவேக முதல் நாள் பிட்சில் இந்தியா, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்களில் நிதிஷ் குமார்தான் அதிக ஸ்கோர். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 27 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களில் அடித்த ஷாட்கள் உண்மையில் பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்தது.

ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷப் பண்ட் போன்றோர் கிளியர் செய்யக் கடினமான பகுதிகளில் அனாயசமாக 2 சிக்ஸர்களை விளாசினார் நிதிஷ் குமார் ரெட்டி. ஆஸ்திரேலியாவை இதுவரை அவர்கள் மண்ணில் அதுவும் பெர்த்தில் வடிவமைக்கப்பட்ட இத்தகைய பிட்சில் எந்த அணியும் இப்படி அவர்களை காயப்படுத்தி இருக்காது. இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நாள். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மோசமான நாள்.