5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா. இதில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். முந்தைய இன்னிங்ஸில் விட்டதையும் சேர்த்து இந்த இன்னிங்ஸில் அற்புதமான விளையாடினர். மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட்டுகள் வீழாமல் பார்த்துக்கொண்டனர். 123 பந்துகளில் அரைசதம் எட்டினார் ஜெய்ஸ்வால். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய 9-வது அரைசதம். கே.எல்.ராகுல் 124 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். 57 ஓவர்கள் முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களையும், கே.எல்.ராகுல் 62 ரன்களையும் சேர்த்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்களைச் சேர்த்து, 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலைக்கு சென்றுள்ளது.