அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. 
 
இதற்கமைய, முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச் சமர்ப்பிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய நாளை மறுதினம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 17 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், நன்மைகளை எதிர்பார்த்து இரண்டாம் கட்டமாக 455,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.