இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்றையதினம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் கூடியது.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், கட்சியின் ஊடகப் பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களை சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்திருந்ததுடன், சண்முகம் குகதாசன் அவர்கள் வழிமொழிந்திருந்தார்.
தமிழரசின் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையிடும் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள், மருத்துவர் இளையதம்பி ஸ்ரீநாத் அவர்களால் முன்மொழியப்பட, அதனை ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள் வழிமொழிந்திருந்தார்.
இக்கூட்டத்தின் போது, தமிழரசுக் கட்சியாக ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவதென்றும், அதற்கான வரைவுகளை முறையாகத் தயாரித்து, திட்டமிட்டதும், ஆக்கபூர்வமானதுமான சந்திப்பை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.