நேற்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் வண்டி ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தனியாருக்கு சொந்தமான இந்த பஸ் வண்டியில் பயணத்தின் போது பாடல்கள் ஒலிபரப்பப்படுவது வழமை. அந்த வகையில் நேற்றும் பஸ்ஸில் இடைக்கால தமிழ் சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என்பன ஒலிபரப்பாகின. இடை நடுவில் சிங்கள பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது.
அதை அடுத்து சினத்துக்குள்ளான பயணி ஒருவர் சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். சிங்களப் பாடலை நிறுத்தி தமிழ் பாடலை ஒலிபரப்புமாறு கூறினார். அவரது கோரிக்கையை ஏற்று நடத்துனரும் பாடலை உடனடியாக நிறுத்தினார்.
ஆனாலும் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பயணி இந்த பஸ் வண்டி யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறது முழுக்க முழுக்க தமிழர்களே பயணிக்கிறார்கள், அப்படி இருக்கும் போது எதற்காக சிங்கள பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்று கேட்டு சண்டையிட ஆரம்பித்தார்.
தொடர்ந்து இனத்துவேஷமான வார்த்தைகளையும் பிரயோகிக்க ஆரம்பித்தார். அதனைக் கேட்டு கோபமடைந்த ஏனைய பயணிகள் அவரோடு தர்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பின்னால் இருந்த பெண் பயணி ஒருவர், இவ்வாறு பேச வேண்டாம் இது அனைவருக்குமான பொதுவான இடம்.
இனத்துவேசத்தை தூண்டும் வகையில் பேச வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். சக பயணி ஒருவரும் இடையில் வந்து சமரசம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை கண்டித்தார். தமிழ் சிங்களம் என்ற எந்தவிதமான இன வேறுபாடும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் இருக்கும் இந்த சமயத்தில் இவ்வாறான துவேசமான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என கண்டித்தார்.
புலம்பெயர் நாடொன்றில் இருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருக்கும் அந்த பயணியின் நடவடிக்கைகளும் சொற் பிரயோகங்களும் ஏனைய பயணிகளையும் எரிச்சலூட்டச் செய்தன. சீதுவயிலிருந்து பம்பலப்பிட்டியில் அவர் இறங்கும் இடம் வரை தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டே வந்தார். இது ஏனைய பயணிகளையும் பெரும் அசௌகரித்துக்குள்ளாக்கியது.
புலம்பெயர் பயணியின் இவ்வாறான நடத்தை தொடர்பில் விசனம் தெரிவித்த ஏனைய பயணிகள், சகோதர மொழியை சேர்ந்த பஸ்ஸின் ஓட்டுனருக்கு ஆதரவாக நடந்து கொண்டதோடு, அவரது பொறுமைக்கும் நன்றி தெரிவித்தனர்.
இனம், மதம், மொழி வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய தருணம் இது.