பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறானது தற்காலிக பின்னடைவு மாத்திரமே. எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. எனவே, மக்களுக்கான எனது பயணம் தொடரும்.” – என்று ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி தெரிவித்தார்.அத்துடன், பொதுத்தேர்தலில் தனக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும், தேர்தல் காலத்தில் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகள் எனவும் பாரத் கூறினார்.நேற்று (17)கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்அவர் மேலும் கூறியவை வருமாறு,’ கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் அதிகமான விருப்பு வாக்கு பாரத் அருள்சாமியாகிய எனக்கே கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தகுதியானவன் நான் என்ற அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர்.நான் போட்டியிட்ட கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவே கண்டி மாவட்டத்தில் என்னால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியவில்லை. இருந்தாலும் எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கின்றது.எங்களுடைய நோக்கம் இரண்டாம் கட்ட இளம் அரசியல் தலைமைகளை உருவாக்குதல். எதிர்வரும் காலங்களில் எம்மைப்போல திறமையான அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மும்மூரமாக செயல்பட்டு கண்டி மாவட்டத்தில் தமிழ் அரசியலை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் அலை காரணமாகவே கண்டி மாவட்டத்தில் எமக்கான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.சுயநல அரசியலுக்காக கண்டி மாவட்ட தமிழ் மக்களை பகடகாய்களாக பயன்படுத்திய அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்குகளை வழங்காமல் நிராகரித்துள்ளமை கண்டி மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஒரு பாடமாகும்.என்மீது மக்கள் ஒரு நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக செயல்பட்டு கண்டி மாவட்டத்தில் மீண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பலத்தை அதிகரித்து அனைவருடனும் ஒன்றிணைந்து கைகோர்த்து தமிழ் அரசியலை சீராக செய்வோம்.பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவென்பது அரசியல் தோல்வி அல்ல. இந்த விருப்பு தேர்தல் முறைமையில் உள்ள நியதி அது. எனவே, ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருப்பின் அதனையும் திருத்திக்கொண்டு மக்களுக்கான எனது பயணம் தொடரும்.” – என்றார்.