தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர்களில் கல்பிட்டி மற்றும் வவுனியா பிரதேசங்களில் இரண்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் முக்கியமாக சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும், பணம் கொடுத்தல், புகைப்படம் எடுத்தல், வாக்குச் சீட்டுகளை கிழித்தல், தாக்குதல் போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அங்கீகரிக்கப்பட்ட நபராக இருந்தாலும் குடிபோதையில் அந்த இடத்திற்கு செல்ல முடியாது எனவும் மொபைல் போனை தன்னுடன் எடுத்துச் செல்லவே முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

எந்த இடத்திலும் பெரிய டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை கூட்டாகப் பார்க்க முடியாது என்றும், அப்படி நடந்தால், பாதுகாப்புப் படையினர் தலையிட்டு அந்த மக்களைக் கலைப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.