பாராளுமன்ற தேர்தல் நாளையதினம்(14) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் இன்றையதினம்(13) காலை தொடக்கம் வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்கெண்ணும் மையமாக செயற்படவுள்ள கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் இன்றையதினம் காலை 7.00 மணி தொடக்கம் வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் என்பன மாவட்டத்தின் 108 வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி பதில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் சூழவுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் குறித்த தேர்தல் கடமைகளுக்காக 40 பஸ்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் கடமைகளுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 1863 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் தங்களது கண்காணிப்பு பணியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.