கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜ் மனைவி.. மகள் பகிர்ந்த உருக்கமான பதிவு..!!

80-90களில் தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக நாயகனாக தனது தனித்துவமான நடிப்பால் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தமிழ் சினிமாவின் வில்லனாக அறிமுகமான சத்யராஜ், தனது ஆரம்ப காலகட்டங்களில் படங்களில் வில்லனாக வந்தார். ஆனால் பாரதிராஜாவின் ‘கடலோர கவிதைகள்’ அவரின் வில்லன் பிம்பத்தை மாற்றி அமைத்தது. ‘கடலோர கவிதைகள்’ படத்தில் கதாநாயகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சத்யராஜுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர அவரும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார். ‘வால்டர் வெற்றிவேல்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘மக்கள் என் பக்கம்’, ‘நண்பன்’, ‘அமைதிப்படை’, ‘ரிக்ஷா மாமா’, ‘பாகுபலி’, ‘கனா’, ‘பெரியார்’ போன்ற படங்கள் இன்று சத்யராஜ் நடிப்பில் மக்களை வியக்க வைக்கும் படங்களாக உள்ளது என்றால் மறுக்க முடியாது.

தீவிர பெரியார் தொண்டரான சத்யராஜ் பெரியாரின் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் திரையில் கிடைத்த இடத்தில் சொல்வதோடு மட்டும் நிறுத்தி விடாமல், தனது வாழ்க்கையிலும் அதனை பின்பற்றி வருகிறார். விஜய், சூர்யா, அஜித் என இளம் நடிகர்கள் நடிக்க தொடங்கிய பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை கைவிட்டு குணச்சித்திர வேடங்களில் அசத்த தொடங்கினார். இன்று 2கே கிட்ஸின் பேவரைட் கட்டப்பாவாக வலம் வருகிறார் சத்யராஜ். இன்றும் பல படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் சத்யராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

திரையில் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சத்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த 4 ஆண்டுகளாக தனக்குள் இருக்கும் துயரத்தை துளியும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து தனது கடமையை செய்து வருகிறார். நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது மகள் திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார், அவருக்கு PEG டியூப் மூலமாகத்தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் முழுவதுமாக உடைந்து விட்டோம், ஆனால் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். நிச்சயமாக அம்மா எங்களுக்கு மீண்டும் கிடைப்பார். கடந்த 4 ஆண்டுகளாக அப்பா எங்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து வருகிறார். சிறந்த சிங்கிள் பேரண்டாக எனது தந்தை இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் அப்பாவின் அம்மா இறந்துவிட்டார், அப்போது என் தந்தைக்கு ஒரு ‘Single Mom’-ஆக நான் உடனிருந்தேன். அப்பாவும் நானும் ‘POWERFUL SINGLE MOMS CLUB’-ல் இருக்கிறோம்” என்று திவ்யா அந்த பதிவில் கூறியிருந்தார். மூலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக நடிகர் சத்யராஜ் மனைவி கோமாவில் இருப்பதாக கூறப்படுகிறது. சத்யராஜ்-மகேஸ்வரி இருவரும் 1979ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.