11 ஆயிரம் திரையரங்குகளில் கங்குவா திரைப்படம்..!

கங்குவா திரைப்படம் ஒரு சண்டை படமாக மட்டுமல்லாமல், மன்னிப்பு பற்றி பேசும் படமாகவும் இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் பட வெளியீட்டுக்கு முந்தைய ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா உள்ளிட்ட படக்குழுவினர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, “இரண்டரை வருட உழைப்பிற்கு பின் வெளியாகவுள்ள இந்த கங்குவா படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது” என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்தார்.

மேலும் பேசியவர், “ஏன் அந்த தேதியில் வரவில்லை, தீபாவளிக்கு வெளியிடவில்லை என ரசிகர்கள் கேட்கின்றனர். இந்த தேதியில் வருவதால்தான் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட முடிகிறது” எனவும் கூறினார்.

படத்தின் இயக்குநர் சிவா பேசுகையில், “கங்குவா திரைப்படத்திற்கு கதையை எழுத எழுத பெரிதாகிக் கொண்டே சென்றது. புதிதாக செய்கிறோம், பெரிதாக செய்கிறோம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தை இவ்வாறு எடுத்து முடிக்க, படத்தில் பணியாற்றிய அனைவரின் பங்கும் முக்கியமானதாக இருந்தது. அனைவரும் கங்குவா படத்தை நம்ம படம் என நினைத்தார்கள். அதுவே கங்குவா சிறப்பாக வருவதற்கு காரணமாக அமைந்தது” என பெருமிதத்துடன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நடிகர் சூர்யா, படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, “கங்குவா திரைப்படத்தின் கதை 700 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிறது. வழிபடும் கடவுள் தீயாக இருந்தால் எப்படி இருக்கும்? நீராக இருந்தால் எப்படி இருக்கும்? அதுவே குருதியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்பதை சொல்லும் படமாக கங்குவா உருவாகியுள்ளது.

மேலும் ஒரு சண்டை படமாக மட்டுமில்லாமல், மன்னிப்பை பற்றி பேசும் படமாக கங்குவா இருக்கும்” என தெரிவித்தார். இதற்காக 170 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக அமைய டீம் ஒர்க் தான் காரணமாக இருந்தது” எனவும் சூர்யா பாராட்டினார்.

“தமிழ் சினிமாவில் இப்படியும் பண்ண முடியும் என்பதற்கு கங்குவா திரைப்படம் ஒரு அடையாளம். இதை சாத்தியப்படுத்தியவர் ஒளிப்பதிவாளர் வெற்றி. இது விஷுவல் திரைப்படம்.

இந்திய சினிமாவின் மற்ற கலைஞர்கள் கங்குவாவை வாயைப் பிளந்து பார்க்கப் போகிறார்கள். இது எப்படி சாத்தியமானது என்று கேட்கப் போகிறார்கள். ஏற்கனவே கரண் ஜோஹர் இதனை கேட்டார். அந்த அளவிற்கு காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.” என ஒளிப்பதிவாளர் வெற்றியை நடிகர் சூர்யா பாராட்டினார்.

இதேபோல், “கங்குவா திரைப்படம் 14ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே சொன்னது போல இது இரட்டை தீபாவளியாக நம்ம எல்லோருக்கும் இருக்கும்” எனவும் சூர்யா மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் தெரிவித்தார்.