மும்பை டெஸ்டிலும் நியூசிலாந்து அபார வெற்றி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக இழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 147 ரன்கள் என்ற குறைவான இலக்கையே எட்ட முடியாத நிலையில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியடைந்துள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று விட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில், 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அந்த அணி இரண்டாம் நாள் முடிவில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர்.

முதல் இரண்டு போட்டிகளை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற போராடி வருகிறது. தற்போது மதிய உணவு இடைவேளை வரை 20 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது.

29.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.