இத்தாலிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்..!

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (30) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இச்சந்திப்பில் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மீள உறுதிப்படுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் இத்தாலியில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் குறிப்பாக பயிற்றப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியுமான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தகைய முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பு குறித்து விசேடமாக குறிப்பிடப்பட்டது.

இந்த சந்திப்பில், இத்தாலிய தூதரகத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலாநிதி எல்பர்டோ அர்சிடியாகோனோ மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.