இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் உப செயலாளர் கொஸ்வத்தவினால் இன்று (30) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பொப்பி மலர் விற்பனையில் கிடைக்கப்பெறும் வருமானம் ஓய்வுப்பெற்ற மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ அதிகாரிகளின் நலன்களுக்கென ஒதுக்கப்படுகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களின் போதும், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த மோதல்களின் போதும் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பொப்பி மலர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியை அண்மித்த ஞாயிற்றுக்கிழமையில் இந்த நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஓய்வுப்பெற்ற மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ உறுப்பினர்களின் நலன்களுக்காக பொப்பி மலர் ஒன்றை அணியுமாறு இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேர்ணல் அஜித் சியம்பலாப்பிட்டிய இதன்போது நாட்டு மக்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேர்ணல் அஜித் சியம்பலாப்பிட்டிய, உப தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, பொருளாலர் மேஜர் வில்டன் டி சில்வா, இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர் மேஜர் சஞ்ஜித் விஜேரத்ன, பொப்பி குழு உறுப்பினர் அமிதா ரோஹண உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.