புனரமைப்புப் பணிகள் காரணமாக சுமார் 10 மாதங்களாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து காங்கசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி புகையிரதம் இன்று (28) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
68 கிலோமீட்டர் நீளமுள்ள மஹவ – அநுராதபுரம் புகையிரத பாதை 119 ஆண்டுகளுக்குப் பிறகு (1905க்குப் பின்னர்) இம்முறை முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத பாதையில் 12 பாலங்கள், 40 அடிக்கு குறைவான நீளம் கொண்ட 25 பாலங்கள் மற்றும் 26 மதகுகள் என்பன நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான 128 கிலோமீற்றர் நீளமான முழுமையான புகையிரத பாதை நவீனமயப்படுத்தல் திட்டத்தின், அநுராதபுரத்திலிருந்து ஓமந்த வரையிலான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ரயில்வே திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு 91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த புனரமைப்புப் பணியானது இந்திய அரசாங்கத்தின் கடனுதவியுடன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்படத்தக்கது.